Share

நடிகர் கமல்ஹாசன் இன்று பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்தார். காவிரி பிரச்னை தொடர்பாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என்று அவர் கூறியிருந்தார். “காவிரிப் பிரச்னையை மீண்டும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்” என்றும் அவர் கூறியிருந்தார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டிருக்கும் போது அதற்கு எதிராக கமல்ஹாசன் இந்தச் செய்கையில் ஈடுபட்டது தமிழர்களுக்குச் செய்திருக்கும் மிகப் பெரிய துரோகம் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

”காவிரி விவகாரத்தைத் தேவையின்றி தவறான பாதைக்குக் கொண்டு செல்கிறார் கமல்ஹாசன்” என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், “காவிரி விவகாரத்தில் கமல்ஹாசன் தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டார். அவர் வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது” என்று பேசியுள்ளார்.

அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறுகையில், “கமல்ஹாசனின் கருத்து தமிழக விவசாயிகளை அழிக்கும் செயல். தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை கமல்ஹாசன் செய்து விட்டார்” என்றார்.

”காவிரி விவகாரத்தில் கர்நாடகப் பிரதிநிதி போல கமல்ஹாசன் பேசுகிறார். அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கியது யார்? அவர் உடனடியாக தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.

பொதுமக்கள் பலரும் கூட கமல்ஹாசனின் பேச்சை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/annyg