Share

இன்று நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதிலிருந்து…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை. அதனை மத்திய அரசு உடனே நிறைவேற்றாவிட்டால் ஒட்டு மொத்த தமிழர்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாக நேரிடும்.  அதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அதனை அமைக்க வேண்டும்.

பல கட்சிகள், வியாபார சங்கங்கள், விவசாய சங்கங்கள் என்று பலரும் போராட்டம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் யாருக்காக போராடுகிறோம் என்பது சரியாகத் தெரியவில்லை. ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் அதுதான். அவர்களின் கஷ்டம், வேதனை ஆகியவற்றை முன்னுறுத்தி போராட்டம் செய்ய வேண்டும். அதைப் பார்த்து கர்நாடக விவசாயிகள் அவர்களின் சிரமங்களைப் புரிந்து கொள்வார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னை குறித்து சொல்ல வேண்டும். இயற்கை, இறைவன் இரண்டும் ஒன்றுதான். பஞ்சபூதங்கள் இணைந்ததுதான் இயற்கை. இதில் எது ஒன்று கெட்டுப் போனாலும் உலகமே அழிந்து விடும். மண், காற்று, தண்ணீரை மாசுபட விடவே கூடாது. அதனால் பல லட்சம் கோடி வருவாய் வந்தாலும், பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகினாலும் அதை செயல்படுத்தக் கூடாது.  ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னை குறித்து எனக்கு அவர்கள் தரப்பிலிருந்து கொடுத்த பதில் விளக்கம் திருப்திகரமாக இல்லை.

தமிழக மக்களின் ஆதங்கத்தை ஏற்று ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்தால் நல்லதுதான். அப்படி இல்லை என்றாலும் நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர் கைகளில் கறுப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பினைத் தெரிவிப்பது போல விளையாட்டில் கலந்து கொள்ளலாம். இந்தியா முழுவது போய் சேரும்.  அல்லது விளையாட்டைப் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் கருப்புத்துணி அணிந்து செல்லலாம்.

காவிரி பிரச்னையில் நான் தமிழகத்துக்கு ஆதரவாக நியாயமாக நாம் குரல் கொடுப்பதை எதிர்த்து எனது படங்களை கர்நாடகாவில் யாரும் திரையிட எதிர்ப்பு தெரிவித்தால் படத்தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் அதைப் பார்த்துக் கொள்வார்கள். அதையும் மீறி நடந்தால் கர்நாடக அரசும், சட்டமும் எதிர் கொள்ளும் என்று நம்புகிறேன்.

இந்தியா என்பது அனைத்து ஜாதி, மத, மொழிகளையும் ஒன்றிணைக்கும் நாடு. இருந்தாலும் காவிரி பிரச்னை நடைபெறும் வேளையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துணைவேந்தர் பதவி கொடுத்திருக்கக்கூடாது. சரியான நேரமல்ல இது.

நான் கமல்ஹாசனை எதிர்க்க மாட்டேன். அவர் என் எதிரியே இல்லை.  என்னுடைய எதிரி ஏழ்மை, வேலை இல்லாத் திண்டாட்டம், லஞ்சம், ஏழைகளின் கண்ணீர், விவசாயிகளின் கண்ணீர், மீனவர்களின் கண்ணீர், இலங்கையிலிருந்து இங்கே அகதிகளாக வந்து இன்னும் நாட்டுரிமை கிடைக்காமல் இருக்கிறார்களே.. அவர்களை தமிழர்கள் என்று மட்டும் தான் சொல்கிறார்கள்.. அவர்களுடைய கண்ணீர்.. இதெல்லாம்தான் என்னுடைய எதிரிகள்.

நிறைய பேசினால் நிறைய எதிரிகள்தான் உருவாகுவார்கள். நான் நிறைய பேசுவது கிடையாது. நிறையப் பேசிப் பேசி அரசியல் செய்து விட்டார்கள். பேச்சு அரசியல் போதும்.

 

Share
The short URL of the present article is: http://seythigal.in/rhw2y